இந்தியா

புதிய தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர்

webteam

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜெகதீஷ் சிங் கேஹர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வரை சுமார் 7 மாதங்களுக்கு அவர் பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் 44வது தலைமை நீதிபதியான ஜெகதீஷ் சிங் கேஹர், தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் சீக்கியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலீஜியம் முறையை ஒழிக்கும் மத்திய அரசின் நீதிபதிகள் நியமன சட்டத்தை செல்லாது என்ற அறிவித்த உச்ச நீதிமன்ற அமர்வுக்கு ஜெகதீஷ் சிங் கேஹரே தலைமை வகித்தவர். அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்தது செல்லாது என்று தீர்ப்பளித்த அமர்விலும், சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதோ ராய்க்கு சிறைத் தண்டனை அளித்த அமர்விலும் ஜே.எஸ். கேஹர் இடம் பெற்றிருந்தார்.