பெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 16 எப்.ஐ.ஆர்களையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு மற்றும் ‘சங்கருக்கு எதிராக இரண்டாவதாக போடப்பட்ட குண்டாசை ரத்து செய்ய வேண்டும்’ என்று அவரது தாயார் கமலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஆகிய இரண்டு வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குண்டர் சட்டத்தை பயன்படுத்தியதை ஆய்வு செய்வதற்கான உருவாக்கப்பட்ட குழு சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்தது தேவையில்லாதது, எனவே அதனை ஏற்க முடியாது என பரிந்துரை வழங்கியது. இதையடுத்து அதனை தமிழ்நாடு அரசும் ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பதிலை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான இரண்டாவது குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாகவும், அதேப்போன்று வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாத பட்சத்தில் அவரை பிணையில் உடனடியாக விடுவிக்கலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். இதனை அடுத்து மதுரை மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் ஜாமீனில் வெளியே வந்தார்.