மேற்கு வங்க மாநிலத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டு, 24,640 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வினை 23 லட்சம் பேர் எழுதினர். இதில் 24 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசு ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின்போது, “சட்டவிரோதமாக நடைபெற்ற 2016-ஆம் ஆண்டு ஆசிரியர் பணிநியமன உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக பணியில் சேர்ந்த 25,753 ஆசிரியர்கள், பணியாளர்கள் தாங்கள் பெற்ற சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவற்றை 12 சதவீத வட்டியுடன் 4 வாரத்தில் திரும்பிச் செலுத்த வேண்டும்” என உத்தரவிடப்பட்டது.
மேலும், மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன செயல்முறை குறித்து விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க சிபிஐக்கு உத்தரவிட்டது. ஆசிரியர்களை நியமிக்க புதிய நியமன செயல்முறையைத் தொடங்குமாறும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்குவங்க ஸ்கூல் சர்வீஸ் கமிஷனிடம் கேட்டுக் கொண்டது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜேபி பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று (ஏப்ரல் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் பணி நியமன ஊழலில், மேற்கு வங்க அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்குமாறு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த தடை, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.