Sisodia supreme court pt desk
இந்தியா

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: மணிஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்!

நிரஞ்சன் குமார்

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா மீதான மதுபான கொள்கை முறைகேடு வழக்கு:

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கடந்த ஆண்டு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது வரை திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை மணிஷ் சிசோடியாவிற்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் அவர்.

Sisodia

இந்த மனு மீதான விசாரணை 16.7.2024ல் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிசோடியா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “சுமார் 16 மாதங்களாக சிசோடியா சிறையில் இருக்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தை நாடுமாறு சிசோடியாவின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், இப்போது வரை வழக்கின் விசாரணை தொடக்க கட்டத்திலேயே உள்ளதால் உச்ச நீதிமன்றத்தை பிணை கோரி நாடியுள்ளோம்” என வாதிட்டார்.

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ்:

இதனைத் தொடர்ந்து மனு மீது 2 வாரங்களில் பதிலளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஆக்ஸ்ட் 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், நீதிபதி பிஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற நிலையில், மணிஷ் சிசோடியா சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு ஷங்கியும், அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் ராஜூவும் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்கள். இரு தரப்பு வாதங்களும் விரிவாக நடைபெற்ற நிலையில் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

aap, ed

மணிஷ் சிசோடியாவுக்கு பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம் - தீர்ப்பின் முழு விபரம்:

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “தற்போதைய சூழலில் இந்த விவகாரத்தை விசாரணை நீதி மன்றத்திற்கும் உயர் நீதிமன்றத்திற்கும் அனுப்பினால் அது பாம்பு ஏணி விளையாட்டு போல ஆகிவிடும். மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீதியை கேலிக்குரியதாக ஆக்கிவிடும். ஒருவர் நீண்ட நாட்களாக சிறைவாசத்தை அனுபவிக்கிறார் என்ற நிலையில், அவருக்கு பிணை வழங்கப்படலாம் என்று ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளை நாங்கள் அலசி ஆராய்ந்தோம். அதை இந்த வழக்கிலும் பொருத்திப் பார்க்கிறோம்.

இந்த வழக்கின் தகுதி அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிபதி உயர் நீதிமன்றம் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் கிடையாது. அதே நேரத்தில் விசாரணை நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் வழக்கில் நடைபெறும் விசாரணை அமைப்புகளின் விசாரணை விரைவாக நடைபெறுவதை அவதானிக்கிறதா என்பதை முக்கிய கேள்வியாக எழுப்ப நினைக்கிறோம். சம்பந்தப்பட்ட நபர், விசாரணை நத்தை வேகத்தில் நடைபெறுகிறது என்று முன்வைத்த வாதங்களை விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. ஜூலை மாதம் மூன்றாம் தேதி 8 குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதையும் விசாரணை நிறைவடைந்ததையும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

மணீஷ் சிசோடியா

“விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்ற மணிஷ் சிசோடியாவின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது”

அப்படி பார்த்தால் அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே விசாரணையை விசாரணை நீதிமன்றம் நிறைவு செய்யும் என்பது முடியாத ஒன்று. விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்கும் மணிஷ் சிசோடியாவின் உரிமை பறிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறு கேட்கும் உரிமை என்பது ஒரு புனிதமான உரிமை. உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாவேத் குலாம் நபி ஷேக் என்ற வழக்கில் இந்த உரிமையை முக்கிய பார்வையாக கொண்டு விசாரணை நடத்தியது. விரைவான விசாரணையை கோரும் உரிமையை நீதிமன்றமோ விசாரணை அமைப்புகளோ உறுதி செய்ய முடியாத நிலையில், பிணையை எதிர்க்க முடியாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

“பிணை என்பது விதி. சிறை தண்டனை என்பது விதிவிலக்கு”

இதன் அடிப்படையில் பார்த்தால் இந்த முக்கியமான உரிமையை பிணை வழங்கும் விவகாரத்தில் விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் சரியாக கவனிக்கவில்லை என்பதை நாங்கள் பார்க்கிறோம். பிணை என்பது ஒரு விதி. அதே நேரத்தில் சிறை தண்டனை என்பது விதிவிலக்கு என்பதை நீதிமன்றங்கள் உணர வேண்டிய தருணம் இது. விசாரணை அமைப்புகள் விசாரணையை மேற்கொள்வதில் செய்துள்ள தாமதம் என்பது மணிஷ் சிசோடியாவின் சுதந்திரத்தை, தனி உரிமையை பறிக்கும் வகையில் இருந்திருக்கிறது. விசாரணையை நிறைவு செய்யும் வரையில் ஒருவரை சிறையிலேயே அடைப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 21 மீறும் வகையில் இருக்கின்றது.

Manish Sisodia

“அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிணை”

சமூகத்தில் முக்கிய இடத்தில் இருக்கக் கூடியவர் தப்பி ஓடவும் விசாரணையில் இருந்து தப்பிக்கவும் முடியாது என்பதையும் கவனிக்கிறோம். எனவே, பிணைக் கோரிய அவரது இந்த மனுவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பிணை வழங்க மறுப்பு தெரிவித்த முந்தைய டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய இரண்டு வழக்கிலும் அவருக்கு நாங்கள் பிணை வழங்குகிறோம். இரண்டு லட்சம் ரூபாய் பிணை பத்திரத்தை வழங்க வேண்டும். பாஸ்போர்ட்டை உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதிக்கிறோம்” என தீர்ப்பில் தெரிவித்தனர்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் “ஏற்கெனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதே வழக்கில் கொடுக்கப்பட்ட பிணை நிபந்தனைகளான ‘ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு செல்லக்கூடாது’ டெல்லி தலைமைச் செயலகத்திற்கு செல்லக்கூடாது’ போன்றவற்றை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அத்தகைய எந்த ஒரு நிபந்தனையையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தனர்.