டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கெஜ்ரிவாலுக்கு தேர்தலில் பிரசாரம் செய்வதற்கான அடிப்படை சட்ட உரிமையோ அல்லது அரசியலமைப்பு உரிமையோ இல்லை. பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல் தலைவருக்கும் இதுவரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது இல்லை. பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் தவறான முன்னுதாரணத்திற்கு அது வழிவகுக்கும். இடைக்கால ஜாமீன் வழங்கும்பட்சத்தில் குற்றங்களை செய்ய நேர்மையற்ற அரசியல்வாதிகளை அது வழிவகுக்கும்” என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பினர் ஜூன் 4 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.