இந்தியா

அதானி குழுமத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை - கேரள அரசின் மனு தள்ளுபடி

அதானி குழுமத்திற்கு திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகை - கேரள அரசின் மனு தள்ளுபடி

webteam

திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விடும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள அரசு தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு நிர்வகிப்பதற்கான குத்தகையை அதானி குழுமத்திற்கு சமீபத்தில் மத்திய அரசு வழங்கியிருந்தது. இந்த விவகாரம் கேரளாவில் பெரும் புயலை கிளப்பி இருந்த நிலையில், கேரளா அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் கடந்த 2020 நவம்பர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. விமானநிலையத்தை நிர்வகிப்பது, பராமரிப்பது தொடர்பாக முன் அனுபவம் இல்லாத "அதானி என்டர்பிரைசர்ஸ்" நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது பொதுநலனுக்கு எதிரானது என கேரள அரசாங்கம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய விமானநிலைய ஆணைய சட்டம் 1994-க்கு எதிரானது என மனுவில் குற்றம்சாட்டியுள்ள கேரள அரசாங்கம், மத்திய அரசின் முடிவிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. இவைத்தவிர ஒரு பயணிக்கு 168 ரூபாய் என்ற வீதத்தில் அதானி குழுமம் விலை நிர்ணயத்த நிலையில், கேரள அரசால் செயல்படுத்தக்கூடிய மாநில தொழில்துறை வர்த்தக அமைப்பு வெறும் 135 ரூபாய் தான் நிர்ணயம் செய்திருந்தது, அதனால் நியாயப்படி இந்த ஒப்பந்தங்களை தவறு எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அரசின் கொள்கை முடிவு, அக்டோபர் 2021 முதல் இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து விமான நிலையத்தின் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாடு ஆகியவற்றை அதானி நிறுவனம் ஏற்கனவே எடுத்துக்கொண்டது, ஊழியர்களுக்கு விமான நிலைய ஆணையத்திடன் இருக்கவோ அல்லது தனியார் நிறுவனத்தின் சேவைக்கு மாறவோ விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது போன்றவை எல்லாம் சுட்டிகாட்டி கேரள அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.