மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்ட விவகாரத்தில் சச்சின் வாசி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மும்பை மாநகர முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங், மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக், ஹோட்டல்கள், பார்களில் இருந்து மாதம் தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு சச்சின் வாசி உள்ளிட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இதனையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அனில் தேஷ் முக் மீது வழக்குப்பதிவு செய்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் வழங்கி அமலாக்கத்துறை வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சிபிஐ வழக்கில் இன்னும் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, “உயர்நீதிமன்ற உத்தரவில் உள்ள விவரங்கள் அவர் ஜாமீன் பெறுவதை மட்டுமே சுட்டிகாட்டுகிறது. மேலும் அவை விசாரணையையோ அல்லது வேறு எந்த நடவடிக்கையையோ பாதிக்காது என்பதை தெளிவுபடுத்துகிறோம். எனவே மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என உத்தரவிட்டனர்.