இந்தியா

சாரதா சிட் ஃபண்ட் விவகாரம்: சிபிஐ மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

சாரதா சிட் ஃபண்ட் விவகாரம்: சிபிஐ மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

webteam

சாரதா சிட் ஃபண்ட் விவகாரத்தில் கொல்கத்தா கா‌‌வல் ஆணையர் ராஜிவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடுமாறு சிபிஐ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவர்களை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சிபிஐ அதிகாரிகளை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நேற்று  மனு தாக்கல் செய்தது. மேலும் தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமை நீதிபதி அமர்விடம் சிபிஐ தரப்பு முறையிட்டிருந்தது. 

இதைக் கேட்ட நீதிபதிகள், ராஜிவ் குமாரை எந்த அடிப்படையில் விசாரிக்கச் சென்றீர்கள் என்றும் உரிய முன் அனுமதி எதுவும் பெற்றீர்களா என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து பதிலளித்த சிபிஐ தரப்பு, வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் எனவே இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை தேவை என்றும் விளக்கம் அளித்தது. ராஜிவ் குமார் வழக்கு ஆவணங்களை அழி‌க்க முற்பட்டதாக ஆதாரம் இருந்தால்‌ அதை இன்று நடைபெற உள்ள விசாரணையின்போது சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆதாரத்தை அளித்தால், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக ராஜிவ் குமாருக்கு கண்டனம் தெரிவிக்கத் தயார் என்று கூறிய நீதிபதிகள், அதேநேரம் ஆவணங்களை அழித்ததற்கு ஆதாரம் இல்லாவிட்டால் சிபிஐ மீதும் தங்கள் அதிருப்தி இருக்கும் என்று எச்சரித்தனர். 

சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் மின்னணு ஆதாரங்களை அழிக்க முயற்சி நடப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், அதை நீதிமன்றத்தில் அளிப்போம் என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிப்பதாகக்கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்த‌னர். 

இதுதவிர நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தச் சென்ற தங்கள் அதிகாரிகளை கொல்கத்தா காவல் துறையினர் கைது செய்தது நீதிமன்ற அவமதிப்பு என‌க் கூறி சிபிஐ தரப்பில் ‌மனு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர், மேற்கு வங்க டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் ஆகியோர் மீது சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது