கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும், சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும், கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் சிலரும், அகில இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. நீதிபதி ஹேமந்த் குப்தா இந்த வழக்குகளை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.