உச்சநீதிமன்றம் முகநூல்
இந்தியா

சாதி மறுப்பு திருமணம் செய்த கர்ப்பிணி மகளை கொலைசெய்த தந்தை; மரண தண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட தனது மகளை ஆணவக் கொலை செய்த தந்தையின் மரண தண்டனையை ரத்து செய்து, 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏக்நாத் கிசான். இவரது மகள் பிரமிளா. குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக கடந்த ஜூன் 28, 2013 ஆம் தேதி வேறு சாதியை சேர்ந்த நபரை பிரமிளா திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத பிரமிளாவின் தந்தை ஏக்நாத் கிசான் சமூகத்தில் தனது நற்பெயரைக் கெடுத்துவிட்டதாக கருதி, மனதில் வஞ்சத்தோடு அடிக்கடி தனது மகள் பிரமிளாவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து வந்துள்ளார்.

இந்தநிலையில்தான், ஒருநாள் மகளின் வீட்டிற்கு சென்ற ஏக்நாத் அங்கிருந்த பாவாடையின் கயிற்றால் கழுத்தை நெறித்து தனது மகளை கொலை செய்துள்ளார். அப்போது, பிரமிளா கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சூழலில், கடந்த ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு, பம்பாய் உயர் நீதிமன்றத்தால் தந்தை கும்பார்கருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், மரணத்தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் ஏக்நாத் கிசான் கும்பார்கர்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இவ்வழக்கை விசாரித்த, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அரவிந்த் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏக்நாத் கிசான் கும்பார்கருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, 20 ஆண்டுகால கடுங்கால சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டது.

இது குறித்து நீதிபதிகள் தெரிவிக்கையில்,

தற்போதைய வழக்கு 'அரிதினும் அரிதான வழக்குகள்' பிரிவில் வராது என்று நாங்கள் காண்கிறோம். அதில் மரண தண்டனை விதிப்பது மட்டுமே மாற்று என்று கருதலாம். மேல்முறையீடு செய்த ஏக்நாத் கிசான் ஒரு குடிகார தந்தை மற்றும் பெற்றோரின் புறக்கணிப்பு, வறுமையை அனுபவித்துள்ளார். அவர் தனது 10 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, தனது குடும்பத்தை ஆதரிக்க வேலை செய்ய தள்ளப்பட்டுள்ளார்.
கும்பார்கர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் எந்தவிதமான குற்றத்தொடர்பும் இல்லை. குற்றம் நடந்தபோது கும்பர்கருக்கு 38 வயது.

இவரது மருத்துவ அறிக்கைகள் அவருக்கு பேச்சு குறைபாடுகள் இருப்பதையும், 2014 இல் ஆஞ்சியோபிளாஸ்டிக்கு உட்படுத்தப்பட்டதையும் வெளிப்படுத்துகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த இவரது நடத்தைகள் அனைவருக்கும் திருப்திகரமாக உள்ளது என்பதை சிறைச்சாலையின் நடத்தை அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இவற்றை கருத்தில் கொண்டு, ஏக்நாத் செய்த குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையானது மற்றும் மன்னிக்க முடியாதது என்றாலும், அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதிப்படுத்துவது இதற்கு சரியானதாக இருக்காது. ஒரு குற்றவாளியால் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை என்றால் மட்டுமே மரண தண்டனை ஏற்புடையது.” என்று கூறி, 20 மரண தண்டனையை ரத்து செய்து கடுங்காவல் தண்டனையை விதித்தனர்.