ராம்தேவ், உச்சநீதிமன்றம் எக்ஸ் தளம்
இந்தியா

தவறான விளம்பர வழக்கு | உத்தரவாதம் அளித்த பதஞ்சலி.. முடித்து வைத்த உச்ச நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவனத்தின் உத்தரவாதத்தை ஏற்று வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைக்க உத்தரவிட்டது.

Prakash J

யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா அமர்வில், கடந்த சில மாதங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது (கடந்த நவம்பரில்) உச்ச நீதிமன்றம், “எந்தவொரு மருத்துவ முறைக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்கக் கூடாது. மருந்துகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிடக் கூடாது” என பதஞ்சலி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

இதையும் படிக்க: ”கமலா ஹாரிஸ் ஜெயிச்சா அமெரிக்கா அவ்ளோ தான்”|எலான் மஸ்க் உடனான உரையாடலில் ட்ரம்ப் காட்டமான விமர்சனம்!

ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பதஞ்சலி தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டதால், பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. மேலும், தவறான விளம்பரம் கொடுத்தது குறித்து மன்னிப்பு கோரி நாளிதழ்களில் விளம்பரம் அளிக்க பாபா ராம்தேவுக்கு உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாளிதழ்களில் விளம்பரம் அளிக்கப்பட்டது.

உச்ச நீதி மன்றம்

தவிர, பாபா ராம்தேவும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது “தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம்” என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்தது. பதஞ்சலி நிறுவனத்தின் உத்தரவாதத்தை ஏற்று வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்துவைக்க உத்தரவிட்டது.

இதையும் படிக்க: UWW விதிமுறைகளில் சிலஓட்டைகள்! இப்படி வாதிட்டால் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு