பாபா ராம்தேவ் ட்விட்டர்
இந்தியா

பொய் விளம்பரம் விவகாரம் - மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்.. சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

பொய் விளம்பரம் தொடர்பான வழக்கின் விசாரணை, இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது தன் தவறுக்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டார்.

Prakash J

யோகா குருவான பாபா ராம்தேவ், ‘பதஞ்சலி’ என்ற பெயரில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் உள்ளார். ஆயுர்வேத துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் ’பதஞ்சலி’ தம் தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிடுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதைத் தடை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. குணப்படுத்தவே வாய்ப்பில்லாத பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என அந்நிறுவனம் உண்மைக்கு மாறாக விளம்பரம் செய்வதாக இந்திய மருத்துவ சங்கம் குற்றம்சாட்டியது.

இந்த வழக்கு கடைசியாக மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது ‘விளம்பரங்களில் தவறான தகவலைத் வெளியிடக்கூடாது’ என பாபா ராம்தேவை எச்சரித்ததுடன், ‘இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும்’ எனவும் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ‘பாபா ராம்தேவ் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது’ எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையின்போது பாபா ராம்தேவ், நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா இருவரும் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இதற்கிடையே பதஞ்சலி நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன், அதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்திரமும் தாக்கல் செய்தது.

இதையும் படிக்க: ’என் புருஷனை கொன்றால் ஸ்பாட்டிலேயே ரூ.50 ஆயிரம்’ - ஸ்டேட்டஸ் வைத்த மனைவி.. பதறியோடிய கணவர்!

இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு, இன்று (ஏப்ரல் 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் நேரில் நேரில் ஆஜரானார். ’பிரமாணப்பத்திரம் திருப்தி அளிக்கவில்லை’ என நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். அதற்கு பாபா ராம்தேவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”நாங்கள் நேரில் ஆஜராகி இருப்பதையும், நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்றம் என்ன சொன்னாலும் அதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார். அதற்கு, ”பாபா ராம்தேவ் கோரிய நிபந்தனையற்ற மன்னிப்பு வெறும் வாய்வார்த்தை” என பாபா ராம்தேவ் தரப்புக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிமன்றத்திடம் அளித்துள்ள உறுதிமொழிகளை பாபா ராம்தேவின் நிறுவனம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய உச்ச நீதிமன்றம், “நீங்கள் ஒவ்வொரு தடையையும் மீறி இருக்கிறீர்கள். இது, மிகக் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு செயல். மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்ற உத்தரவுகளும் மதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தது. அத்துடன், புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய இருவருக்கும் ஒரு வாரம் அவகாசம் அளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையையும் தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க: ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!