பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம் file
இந்தியா

பில்கிஸ் பானு வழக்கு|ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

Prakash J

குஜராத்தில், கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கலவரத்தில் அவரது உறவினர்களும் கொலை செய்யப்பட்டனர். பின்னர் நல்வாய்ப்பாக பில்கிஸ் பானு உயிர்பிழைத்த நிலையில், அவர் அளித்த புகார் மற்றும் சாட்சியத்தின் பேரில், 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பில்கிஸ் பானு

அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நன்னடத்தையின் அடிப்படையில் குஜராத் அரசு அவர்களை விடுதலை செய்தது. இவர்களுடைய விடுதலைக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: ”அரசு ஆதரவு மதவெறி”-உ.பி. கன்வார் யாத்திரை.. வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர் பெயர்களை எழுத உத்தரவு!

இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் பல்வேறு தரப்பினர் இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ’தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை’ என தெரிவித்ததுடன், முன்விடுதலை செய்யப்பட்ட 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும்” என உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளில் 5 பேர் சரணடைவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்தனர். ஆனால், அதையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று கோத்ரா துணை சிறைச்சாலையில் சரணடைந்தனர்.

உச்ச நீதி மன்றம்

இதைத் தொடர்ந்து, பில்கிஸ் பானு வழக்கில் தங்கள் விடுதலையை ரத்து செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி, ராதிஷ்யாம் பகவன்தாஸ் மற்றும் ராஜூபாய் பாபுலால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஜூலை 19) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ”உங்களின் அடிப்படை உரிமை எங்கு பாதிக்கப்பட்டுள்ளது? ஏன் அரசியலமைப்பு சட்டம் 32ன் கீழ் தாக்கல் செய்துள்ளீர்கள்? இந்த மனுவை அந்தப் பிரிவின்கீழ் தாக்கல் செய்ய உகந்ததுதானா?'' என கேள்வி எழுப்பினார். அதன்பிறகு அவர்கள் 2 பேரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: ’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!