சுரங்கம் pt web
இந்தியா

கனிம வள வரி: மத்திய அரசு, குத்தகைதாரர்களிடம் மாநில அரசு வரியை பெற்றுக்கொள்ளலாம் - உச்சநீதிமன்றம்

கனிம வளங்களுக்கு வரி விதிக்க, ராயல்டி பெற மாநில அரசுகளுக்கே அதிகாரமுள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மத்திய அரசு மற்றும் குத்தகைதாரர்கள் வசூலித்த வரியை மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

PT WEB

கனிம வளங்களின் நிலங்களின் மீதான வரி

கனிம வளங்களின் நிலங்களின் மீதான வரி மற்றும் ராயல்டி ஆகியவற்றை வசூலிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என கடந்த ஜூலை 25ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் 8 நீதிபதிகள் மாநில அரசுகளின் அதிகாரத்தை உறுதிப்படுத்தி இருந்தார்கள்.

தீர்ப்பில், “சுரங்கங்கள் மற்றும் குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, நாடாளுமன்றத்தின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை. அரசியலமைப்பின் 246-வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களே சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெறுகின்றன.

ராயல்டி என்பது வரி அல்ல.. குத்தகைப் பணம்

சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் மூலம், மாநில அரசுகள் தங்கள் வரம்புக்குள் வரக்கூடிய சுரங்கங்கள் மற்றும் குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது. சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு செலுத்தும் ராயல்டி என்பது வரி அல்ல. அது குத்தகை பணம்தான்” என அமர்வு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதுவரை மத்திய அரசு வசூலித்த வரியினை மாநில அரசுகளுக்கே திரும்ப செலுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மீண்டும் விசாரணை நடத்தியது.

தவணை முறையில் குத்தகை பணம்

வரித் தொகையை மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது என்பது சாத்தியம் கிடையாது. இதுகுறித்த விரிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில், “கனிமவளங்கள் விவகாரத்தில் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் கனிமவளங்கள் மீதான வரி மற்றும் ராயல்டி ஆகியவற்றை மத்திய அரசு மற்றும் சுரங்க குத்தகைத்தாரர்களிடம் இருந்து மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம்.

அடுத்த 12 ஆண்டுகளுக்கு தவணை முறையில் இந்த நிலுவைத் தொகையினை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ளலாம். இருப்பினும் கடந்த கால நிலுவைத் தொகைக்கு அபராதம் மற்றும் வட்டியை மாநிலங்கள் வசூலிக்க கூடாது” என தீர்ப்பளித்தனர்.

இதில் நீதிபதி நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை முன்னதாக வழங்கியதால், அவர் உத்தரவு நகலில் கையெழுத்திட மாட்டார் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.