உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எக்ஸ் தளம்
இந்தியா

பெங்களூருவை ‘பாகிஸ்தான்’ எனக் கூறிய விவகாரம்| மன்னிப்பு கேட்ட நீதிபதி.. முடித்து வைக்கப்பட்ட வழக்கு!

Prakash J

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாச ஆச்சார் ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை, ’பாகிஸ்தான்’ என்று கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், நீதிபதி ஸ்ரீஷானந்தா ஒரு பெண் வழக்கறிஞர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோவும் பரவியது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இவ்விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ”உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்து கட்டுப்பாடு தேவை. இதுதொடர்பாக இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்த நீதிமன்றம் அடுத்த விசாரணையை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது. இதற்கிடையே, இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டதற்கு கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பகிரங்க மன்னிப்பு கோட்டிருந்தார்.

நீதிபதி வேதவியாச ஆச்சார் ஸ்ரீஷானந்தா

இதுதொடர்பாக பேசிய நீதிபதி, “நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக்கத்திலோ தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை, அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த், ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதியின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைத்தது. இதுதொடர்பாக நீதிமன்ற அமர்வு, "உயர்நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே, அதன் கண்ணியம் கருதி, அவருக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க தேவையில்லை என்று முடிவெடுத்துள்ளோம்.

நீதிமன்றத்திற்குள் நடக்கும் விசயங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், நீதிமன்றத்திற்கு வெளியே உள்ளே இருக்கும் பார்வையாளர்கள் வரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீதிபதியின் இதயம், மனசாட்சியும் பார பட்சமற்றதாக இருந்தால் மட்டுமே நீதியை வழங்கமுடியும். நீதித்துறையில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டு மதிப்புகள் மட்டுமே அரசியலமைப்பில் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பாலினம் அல்லது சமூகத்திற்கு எதிராக பேசுவது பின்விளைவுகளை ஏற்படுத்தும். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று நம்புகிறோம். இருப்பினும், இந்த நாட்டின் ஒரு பகுதியை பாகிஸ்தான் என்று கூறக்கூடாது” எனக் கூறி தீர்ப்பை முடித்துவைத்தனர்.