நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை இல்லை என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு டெல்லி நகரம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையன்று பட்டாசுக்களை வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல நாடு முழுவதும் விஸ்தரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுவை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த வழக்கில் எதிர்தரப்பாக பட்டாசு விற்பனையாளர் சங்கங்கள் சேர்க்கப்பட்டது. இதனிடையே சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக்கோரி நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டமும் நடைப்பெற்றது.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் ஆசோக் பூஷன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி முழுவதும் பட்டாசுக்களை வெடிக்க போட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.