ஜேஎன்யு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை சன்னி லியோன், ஒருவரை ஒருவர் பாதிக்காத வகையில் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இரவு ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் நுழைந்த முகமூடி அணிந்த கும்பல் ஒன்று கொடூரமான முறையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் ஜேஎன்யு மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தார்.
இந்நிலையில், ஜேஎன்யு தாக்குதல் சம்பவம் குறித்து நடிகை சன்னி லியோன் கருத்து தெரிவித்துள்ளார். “எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. வன்முறை இல்லாத ஒரு தீர்வு இருக்குமென நான் நம்புகிறேன்.
இந்த தாக்குதல் சம்பவங்களால் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவர்களது குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளனர். இளைஞர்களுக்கும் பாதுகாப்பு குறித்த அச்சம் உருவாகியுள்ளது. வன்முறையை நிறுத்துமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். யாரையும் பாதிக்காத வகையில் ஒரு தீர்வினை காண வேண்டும்” என்று சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.