சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயங்கள் இருந்ததாக டெல்லி காவல்துறை தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் எம்பி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இந்த வழக்கை டெல்லி போலீசார் விசாரித்து வந்தனர். டெல்லி போலீசார் சசி தரூர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 498-A மனைவியை கொடுமைப் படுத்தியதாகவும் மற்றும் பிரிவு 306 தற்கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால் சசி தரூர் இந்த வழக்கில் ஜாமின் பெற்றிருந்ததால் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கு, டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிபதி அஜய் குமார் முன்பு டெல்லி காவல்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதில் டெல்லி காவல்துறையின் வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, “சுனந்தா புஷ்கர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பிரதே பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவரின் உடலில் 15 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அத்துடன் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு மிகவும் மன வருத்தத்துடன் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது ” எனத் தெரிவித்தார்.