பாஜக மூத்த தலைவரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
சுமித்ரா மகாஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்ததாக காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் நேற்றிரவு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அவரது உடல்நிலை குறித்து குடும்பத்தினரிடமிருந்தோ அல்லது கட்சி சார்பிலோ எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வராத நிலையில், சசி தரூர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா, சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார் எனவும், அவரைப் பற்றிய மரண செய்திகள் வெறும் வதந்தியே என்றும் தெரிவித்தார். இதேபோல் தனது தாய் நலமுடன் உள்ளார் என்று சுமித்ராவின் மகனும் வீடியோ வெளியிட்டுள்ளார். இதையடுத்து, தனது ட்விட்டர் பதிவை நீக்கி வருத்தம் தெரிவித்துள்ள சசி தரூர், சுமித்ரா மகாஜன் நீண்டகாலம் நலமுடன் வாழவேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.
78 வயதான சுமித்ரா மகாஜன், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் இருந்து 1989ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் அதிக காலம் பெண் எம்.பி.யாக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக்காலமான 2014 முதல் 2019 வரை மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தவர்.