மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் ராவ், விங் காமெண்டர் அபிநந்தனை சந்தித்தார்.
இந்திய விமானத்தை இயக்கிச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த மாதம் 27ஆம் தேதி பாகிஸ்தானிடம் சிக்கினார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
அபிநந்தனுக்கு கீழ் தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது மருத்துவ பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இன்று இரண்டாவது நாளாக அபிநந்தனுக்கு டெல்லி கன்டோன்மென்ட் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. அங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் கீழ்தண்டுவடப்பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. மிக்-21 ரக விமானத்தில் இருந்து வெளியேறிய போது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அவரது உடலில் கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதும் ஸ்கேன் செய்ததில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் மேலும் சில தினங்களுக்கு தொடரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராணுவ மருத்துவமனையில் உள்ள விங் காமெண்டர் அபிநந்தனை மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் ராவ் சந்தித்துள்ளார். முன்னதாக, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன், ஏர் மார்ஷல் பி.எஸ்.தனோவா ஆகியோர் அபிநந்தனை தனித்தனியாக சந்தித்தனர்.