இரோம் ஷர்மிளாவின் திருமணத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவின் திருமணம் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி கொடைக்கானலில் நடைபெற உள்ளது. ஷர்மிளா தனது நீண்டகால நண்பரை திருமணம் செய்ய உள்ளார். தற்போது கொடைக்கானலில் வசித்து வரும் அவர், தனது திருமணத்தை கொடைக்கானலில் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தார். இவரது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பலர் சார்பதிவாளர் அலுவலத்தில் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இரோம் ஷர்மிளா திருமணத்துக்கு எதிரான மனுக்களை சார்பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது. திருமணத்துக்காக பதிவு செய்யும் நபர் உரிய வயதினை அடைந்திருந்தால் போதும் என்ற சிறப்பு திருமண சட்ட விதியின்படி எதிர்ப்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில், ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டதற்கு எதிராக 16 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய இரோம் ஷர்மிளாவை தேர்தலில் அம்மாநில மக்கள் ஆதரிக்கவில்லை. இதனால் தன்னுடைய மாநிலத்தை விட்டு அவர் கொடைக்கானலில் குடிபுகுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.