இந்தியா

அதிக பாசிட்டிவிட்டி ரேட் தெரியும் மாநிலங்களில் தமிழகம்: மத்திய சுகாதாரத்துறை செயலர் தகவல்

அதிக பாசிட்டிவிட்டி ரேட் தெரியும் மாநிலங்களில் தமிழகம்: மத்திய சுகாதாரத்துறை செயலர் தகவல்

நிவேதா ஜெகராஜா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் தகவலின்படி, நாட்டில் 50 சதவிகிதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை என்பது தெரியவந்துள்ளது.

மத்திய கூடுதல் சுகாதார செயலாளர் லாவ் அகர்வால், இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவில் 8 மாநிலங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ‘சிகிச்சையிலிருக்கும் கொரோனா நோயாளி’ எண்ணிக்கையும், 9 மாநிலங்களில் 50,000 முதல் ஒரு லட்சம் ‘சிகிச்சையிலிருக்கும் கொரோனா நோயாளி’ எண்ணிக்கையும், 19 மாநிலங்களில் 50,000 த்துக்கும் குறைவான  ‘சிகிச்சையலிருக்கும் கொரோனா நோயாளி’ எண்ணிக்கையும் இருக்கிறது” எனத்தெரிவித்துள்ளார்.

மேலும்,

  • நாட்டில் இப்போது சிகிச்சையிலிருக்கும் கொரோனா நோயாளிகளில் 25 சதவிகிதம் பேர், 7 மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
  • 9 மாநிலங்களில், 20 – 25 பாசிட்டிவிட்டி ரேட் இருக்கிறது.
  • 22 மாநிலங்களில், 15 சதவிகிதத்துக்கும் மேலான பாசிட்டிவிட்டி ரேட் இருகிறது
  • 13 மாநிலங்களில், 5 – 15 சதவிகித பாசிட்டிவிட்டி ரேட் பதிவாகிறது
  • ஒரே ஒரு மாநிலத்தில்மட்டும், 5 சதவிகிதத்துக்கும் குறைவான பாசிட்டிவிட்டி ரேட் பதிவாகிறது

எனக்கூறியுள்ளார் அவர். இதைத்தொடர்ந்து வேறு சில முக்கிய தரவுகளையும் அவர் கூறியுள்ளார். அதன் விவரங்கள், இங்கே:

“ ‘கடைசி மூன்று வாரங்களில், அதிக பாசிட்டிவிட்டி ரேட் மற்றும் தொற்று அதிகம் உறுதிசெய்யப்படும் மாநிலங்களாக இருப்பவை – தமிழகம், மேகலாயா, திரிபுரா, மணிபூர், நாகலாந்து, சிக்கிம், மிசோரம்’

50 சதவிகித இந்தியர்கள் மாஸ்க் அணிவதில்லை; மாஸ்க் அணிபவர்களில் 64 சதவிகிதம் பேர் வாய்ப்பகுதிக்கு மட்டுமே மாஸ்க்கை பயன்படுத்துகின்றனர் – மூக்கு பகுதிக்கு அணிவதில்லை; 2 சதவிகிதம் பேர் கழுத்துக்கு மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்; 14 சதவிகிதம் பேர் மட்டுமே முறையாக மாஸ்க் அணிகின்றனர்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் பிற்பகுதியிலிருந்து, அதாவது கடந்து 12  வாரங்களாக, ஒருநாளில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை 2.3 சதவிகித வேகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புரங்களில் கொரோனா பரவும் விகிதமும் அதிகரித்துவருகிறது” எனக்கூறியுள்ளார்.

ஐ.சி.எம்.ஆர். இக்யக்குநர் பல்ராம் பார்கவாவும் இந்த பத்திரிகையாளர் பேட்டியின்போது உடனிருந்தார். அவர் பேசும்போது, “நாடு முழுவதும் கடந்த 16 மாநிலங்களில் 2,553 புதிய அரசு மற்று தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டன” எனத்தெரிவித்துள்ளார்.