work from home facebook
இந்தியா

“WFH-ஐ விட, அலுவலகம் சென்று பணிபுரிவோரின் மனநலன் நன்றாக இருக்கிறது” - ஆய்வு சொல்வது என்ன?

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலன் நன்றாக இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த சேப்பியன்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை விட அலுவலகத்தில் இருந்து பணிபுரிபவர்களின் மனநலன் நன்றாக இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த சேப்பியன்ஸ் லேப்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி விரிவாக அறியலாம்...

Work From Home என்ற வார்த்தையை அதிகளவில் புழக்கத்துக்கு கொண்டு வந்தது கொரோனா லாக்டவுன் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் அதற்கு முன்னரேகூட அமேசான் போன்ற ஐடி நிறுவனங்கள்தான் வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதிகளை ஊழியர்களுக்கு வழங்கியிருந்தது. பின் கோவிட் வந்து அந்த நடைமுறையை பரவலாக்கியது. இதனால் கோவிட் தொற்று முடிந்த நிலையிலும் சில நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் விருப்பத்தை ஒரு ஆப்ஷனாக ஊழியர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அன்றாடம் வேலைக்கு செல்வதே சிலருக்கு சங்கடமாக இருக்கும் பட்சத்தில், வீட்டிலிருந்தே பணிபுரிந்தால், பெட்ரோல் செலவு போன்ற அன்றாட பிரச்னைகளை தவிர்த்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஆனால், வீட்டிலிருந்து பணிசெய்வோம் பெட்ரோல் செலவு போன்ற சிக்கல்களிலிருந்து தப்பித்துக் கொண்டாலும், “நீண்ட நேரம் வீட்டிலிருந்து பணிபுரிவது, மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுகிறது” என்ற அதிர்ச்சிகர ஆய்வின் முடிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான Sapien Labs நடத்திய ஆய்வில் இதுகுறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதன்படி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மனநலம், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களின் மனநலனை விட சிறப்பாக இருக்கிறது என்று தெரிகிறது. இந்த ஆய்வில், இந்தியா உட்பட 65 நாடுகளைச் சேர்ந்த 54,831 பேர் பங்கேற்றனர்.

உறவு - மனநலன்

நமது குடும்ப வாழ்க்கை போலவே, பணி வாழ்வும் ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி தனிப்பட்ட ஒன்றாக இருக்கிறது. நமது வீட்டில் உள்ள உறவுகள் எப்படி நமது மனநலனுக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்களோ, அதே போலதான் வேலை செய்யும் இடத்திலும் நாம் கண்டுபிடிக்க தவறிய சில உறவுகளும் நமது மனநலனை மேம்படுத்த ஒரு காரணியாக இருக்கிறது.

தெளிவாக சொல்லவேண்டுமெனில், மனநலத்தை மேம்படுத்துவதில் சக ஊழியர்களுடனான உறவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என ஆய்வு தெரிவிக்கிறது.

வாடிக்கையாளர் சேவை மற்றும் உடல் உழைப்பில் பணிபுரிபவர்கள், Human care, வணிகம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுபவர்களைவிட மனநலனில் பின் தங்கி இருக்கிறார்கள் என கூறுகிறது.

மேலும் முழு நேரமும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் சோகமாகவும், தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உணர வாய்ப்புள்ளது. இதனால் சோகம் மற்றும் நம்பிக்கையற்ற உணர்வுகள், தேவையற்ற எண்ணங்கள் ஏற்பட்டு இவர்களுக்கு ஆற்றல் குறையக்கூடுமாம். ஆற்றல் குறைகையில் சுறுசுறுப்பாக வேலை செய்வது தடைபட்டு, உடல் ஆரோக்கியப் பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் யதார்த்தத்திலிருந்து விலகியிருப்பது போன்ற உணர்வுகள் இவர்களுக்கு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

குழுக்களில் பணிப்புரிபவர்கள்

அதேசமயம் தனியாக வேலை செய்பவர்களை விட குழுக்களில் பணிபுரிபவர்கள் சிறந்த மன ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், கலப்பின வேலை முறையில் பணிபுரிபவர்கள் சிறந்த மனநலம் கொண்டவர்களாகவும், இந்தியாவில், கலப்பின முறையை காட்டிலும் அலுவலகத்திலிருந்து பணிபுரியும் பணியாளர்கள் சிறந்த மனநலத்துடன் இருப்பவர்களாகவும் ஆய்வு முடிவுகளில் அறியப்படுகின்றனர். மற்ற நாடுகளை விட இந்திய ஊழியர்களிடையே குழுப்பணியின் காரணமாக மனநலம் மேம்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.