பேரணியில் மாணவர்கள் pt web
இந்தியா

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்... “இனிமேலும் பொறுக்க முடியாது” சாலையில் இறங்கிய மாணவர்கள்

Angeshwar G

மீண்டும் பதற்றமான நிலையில் மணிப்பூர்

மணிப்பூரில் ட்ரோன்கள் மற்றும் சிறிய ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் என, சமீப நாட்களில் கவலைக்குரிய வகையில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து முதலமைச்சர் பிரேன்சிங், காவல்துறை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். கலவரம் தொடர்பாக ஆளுநர் மூலமாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர்

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு அமைப்புகள் ஒருங்கிணைத்து வருகின்றன. மணிப்பூர் காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை, ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் உளவுத்துறை என பல்வேறு அமைப்புகளும், மணிப்பூரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

மணிப்பூர் கலவரங்களில் துப்பாக்கிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சிறிய ரக ராக்கெட் ஏவுகணைகளை பயன்படுத்துவது பிரச்னையை மிகுந்த சிக்கலாக்குகிறது என ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக செப்டம்பர் 9 மற்றும் 10 என இரு நாட்களை மாநில அரசு விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது.

களத்தில் மாணவர்கள்

இந்நிலையில் மணிப்பூரில் நிலவும் நெருக்கடி நிலை, அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் போன்றவற்றை எதிர்த்து மாணவர்கள் பேரணி மேற்கொண்டுள்ளனர். மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், 18 எம்எல்ஏக்களுடன் ஆளுநரை சந்தித்த ஒரு நாள் கழித்து மாணவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும், அமைதியை நிலைநாட்டவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் மாணவர்கள் காலை 10 மணியளவில் பேரணியைத் தொடங்கினர்.

பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டத்தை நிர்வகிப்பதால் சற்றே பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏனெனில், மாணவர்கள் கலவரத்தை நிர்வகிக்கும் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மாநில அரசுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். ஆளுநர் ஒருங்கிணைந்த அதிகாரத்தை மாநில முதலமைச்சருக்கு மாற்றும் வரை நாங்கள் இந்த இடத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை என்றும் ஆளுநர் பொது மக்களிடம் நேரடியாக பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

நிம்மதியாக படிக்க வேண்டும்

பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பேரணியில் பங்குகொண்டுள்ளனர். இந்தப் பேரணியின் ஒரு பகுதியாக முதல்வரின் இல்லம் மற்றும் ஆளுநரின் ராஜ்பவனை முற்றுகையிடும் போராட்டத்திலும், பின்னர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தில், தீவிரவாத அமைப்புகளின் ட்ரோன் தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களையும் மாணவர்கள் கண்டித்தனர்.

இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், கடந்த 16 மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதல், தங்களையும், தங்களுக்கு நெருக்கமானவர்களின் உயிர்களையும் ஆபத்தில் தள்ளியுள்ளது மட்டுமல்லாமல், தங்களது கல்வியையும் கடுமையாக பாதித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், அச்சமின்றி படிக்கக்கூடிய சூழலை உருவாக்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில், மணிப்பூரைக் காப்பாற்றுங்கள், துணை ராணுவப் படைகளே திரும்பிச் செல்லுங்கள் என்றும் முழக்கங்களை எழுப்பினர். மேலும், திறமையற்ற எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யுங்கள் என்றும் வலியுறுத்தினர். இந்த பேரணி, கலவரத்தால் மாணவர்கள் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களின் பேரணி தற்போதை கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசை நிர்பந்திக்கும் வகையில் அமைந்துள்ளது.

மணிப்பூர் வாழ்க

நேற்றும் இரவு 7.30 மணியளவில் டிடிம் (Tiddim) சாலையில் இருந்து இம்பால் மேற்கில் உள்ள கெய்ஷாம்பட் வரை பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். ஆனாலும், காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பேரணியைக் கலைக்க முயன்றனர். மணிப்பூரைப் பிரிக்காதீர்கள், கிராமங்களில் உள்ள தன்னார்வலர்களை கைது செய்யாதீர்கள், மத்தியப் படைகளை திரும்பப் பெற வேண்டும் மற்றும் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை திரும்பப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த பொதுமக்கள், ‘மணிப்பூர் வாழ்க’ என்றும் முழக்கங்களை எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.