தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டதைப் போல் கர்நாடகாவில் எருது பந்தயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு எருது பந்தயத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து கர்நாடகாவில் எருது பந்தயத்திற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் எருது பந்தயம் மீதான தடையை நீக்க வேண்டும் என கன்னட அமைப்பினர், மாநில விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஹூப்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியது போல் எருது பந்தயம் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் எனவும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் உறுதியுடன் கூறினர்.