இந்தியா

”என்னால சமாளிக்க முடியல.. சாரி அம்மா” - தெலங்கானாவை உலுக்கிய மாணவனின் உருக்கமான கடிதம்

”என்னால சமாளிக்க முடியல.. சாரி அம்மா” - தெலங்கானாவை உலுக்கிய மாணவனின் உருக்கமான கடிதம்

Sinekadhara

கல்லூரியில் அழுத்தம் அதிகமாக கொடுப்பதால் என்னால் சமாளிக்க முடியவில்லை என 11ஆம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அலர்ஜி மருந்து கொடுக்கச்சென்ற தனது தந்தையிடம் 16 வயது சிறுவன், தனது கல்லூரியில் கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக மிகவும் சிரமப்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறான். அதிகமாக அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறிய சில மணிநேரங்களிலேயே தவறான முடிவை எடுத்துள்ளான். அவனுடைய கடைசி வார்த்தைகள் உதவிக்கான அழைப்பு என்பதை அப்போது யாரும் புரிந்துகொள்ளவில்லை.

ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள நார்சிங்கி என்ற இடத்தில் இயங்கிவரும் ஹாஸ்டலுடன் இணைந்த ஜூனியர் கல்லூரியில் 11ஆம் வகுப்பு படித்துவந்த மாணவனுக்கு தினந்தோறும் ஐஐடி பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக மாணவர்கள்மீது மிகுந்த அழுத்தமும் கொடுத்து வந்துள்ளனர். மாணவர்களுக்கு இரவு 10 மணிவரை படிப்பு நேரம் இருக்குமென்பதால் வகுப்பறைகளில் அமரவைக்கப்பட்டிருந்தனர். படிப்பு நேரம் முடிந்தபிறகு மாணவர்கள் அனைவரும் தங்கள் ஹாஸ்டல் அறைகளுக்குச் சென்றுள்ளனர். அப்போது இந்த ஒரு சிறுவனை மட்டும் காணாததால் அவனுடைய நண்பர்கள் இதுகுறித்து ஹாஸ்டல் வார்டனிடம் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அவர்கள் தங்கள் நண்பனைத் தேட தீவிர முயற்சிகள் எடுக்காததைக் கண்ட சக மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று தேடியுள்ளனர். அப்போது ஒரு வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டறியப்பட்ட தங்கள் நண்பனை வேகமாக தூக்கிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால் அதற்கு முன்பே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் அதிகாலை 4 மணியளவில் மாணவர்கள் அனைவருக்கும் 2 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சிறுவனின் நண்பர்கள் போலீசாரிடம் ஒரு  தற்கொலை குறிப்பை கொடுத்துள்ளனர். அது சிறுவன் இறப்பதற்கு முன்பு தனது கைப்பட எழுதிய கடிதம்.

அதில், “என்னால் இதனை சமாளிக்க முடியவில்லை அம்மா. அதனால்தான் இந்த தவறான முடிவை நான் எடுக்கிறேன். ப்ளீஸ் என்னை மன்னித்துவிடுங்கள். நான் அனுபவித்த சித்திரவதைகளை வேறு யாரும் அனுபவிக்கக்கூடாது. அவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்யுங்கள்... இதனை உங்களை இந்த நிலைக்கு உட்படுத்தியதற்கு மன்னிக்கவும் அம்மா” என்று எழுதியுள்ளான். அந்த தற்கொலை குறிப்பு முழுக்க முழுக்க தனது பெற்றோர், மூத்த சகோதரன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளான்.

இதுகுறித்து நண்பர்கள் கூறுகையில், சிறுவன் கடந்த சில நாட்களாகவே அதீத அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் தங்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளனர். ”இதற்கு முக்கிய காரணம் சிறுவனுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்தான். அவன் அதிக மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டான். சில நாட்களாக மன அழுத்ததிற்கு ஆளாகி இருந்த அவன், எங்களிடமிருந்து தன்னை விலக்கிக்கொண்டான்” என்று சிறுவனின் நண்பர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் அந்த கல்லூரியில் சில மாணவர்கள் அங்கு சக மாணவர்களை உடலளவில் தாக்குவது, படிப்பதில் பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்துவது போன்ற வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். தண்டனை அளிப்பது இங்கு உதவாது. காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும் எங்களுடைய நாளானது வகுப்புகள், படிப்பு என சுழன்றுகொண்டே இருக்கும். காலை, மதியம் மற்றும் இரவு உணவு நேரங்களில் மட்டும்தான் இடைவேளை. இப்படி இரவு 10 மணிவரை வகுப்புகள் இருந்தாலும், அடிக்கடி டெஸ்ட் இருக்குமென்பதால் நள்ளிரவு வரை படிக்கவேண்டி இருக்கும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதில் நன்றாக படிக்காவிட்டால் மற்ற மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக ஜாதி அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்கின்றனர். இந்த இறப்பு குறித்து நிர்வாகம் அவனுடைய குடும்பத்துக்கு தெரிவிக்கவில்லை எனவும், மாணவர்களே பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் என்றும் மாணவனின் மாமா தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவன் காணாமல்போனதாக கூறியபிறகும் 15 நிமிடங்களுக்கும் மேலாக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சக மாணவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெலங்கானா கல்வி அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களை அடித்து துன்புறுத்தும் வீடியோக்களை பார்த்த அவர், “கண்டிப்பாக பள்ளிகளில் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்லூரியில் இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நான் வீடியோக்களை பார்த்தேன். அதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தவிருக்கிறோம்” என்றார். சிறுவனின் தற்கொலை குறித்து கல்லூரி அதிகாரிகள்மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் குடும்பத்தாரால் குறிப்பிடப்பட்ட 4 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவனின் இந்த அதிர்ச்சி மரணமானது தெலங்கானாவில் பதற்றத்தை கிளப்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வாராங்கல்லைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர் வெளியிட்டதால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 2021ஆம் ஆண்டில் 1,64,033 பேர் நமது நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.