இந்தியா

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கல்லூரி விடுதிக்குள் மாணவர் படுகொலை!

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கல்லூரி விடுதிக்குள் மாணவர் படுகொலை!

webteam

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் போஸ்டர் ஓட்டும் தகராறில் கல்லூரி விடுதிக்குள், இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டம் மூணார் வட்டவடா பகுதியை சேர்ந்த மாணவர் அபிமன்யூ, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜா கல்லூரியில் படித்து வந்தார். இவர் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கல்லூரி சுற்றுச்சுவரில் போஸ்டர் ஓட்டுவதில் அபிமன்யூவுக்கும், எஸ்டிபிஐ கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு கல்லூரி விடுதிக்குள் புகுந்த 15 பேர் கொண்ட கும்பல், அபிமன்யூவை கத்தியால் குத்தி படுகொலை செய்தது. தடுக்க வந்த சக மாணவர்களையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.

இதில் படுகாயமடைந்த அர்ஜூனன் என்ற மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவர் அபிமன்யூவை கொலை செய்ததாக எஸ்டிபிஐ கட்சி பிரமுகர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கல்லூரி விடுதிக்குள் புகுந்து அரசியல் கட்சியினர் நடத்திய இந்த படுகொலை சம்பவம் மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான ராஜீவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.