“நான் தாயகம் திரும்பி விட்டால், போர் நடைபெறும் அந்த இடத்தில் எனது பூனையை கவனிக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால் என்னுடைய செல்லப்பிராணியையும் என்னுடன் அழைத்து வந்துவிட்டேன்” என தர்மபுரியை சேர்ந்த மருத்துவ மாணவர் கவுதம் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையே கடுமையான போர் நடைபெற்று பெறும் சூழலில் இந்திய விமானப்படையின் விமானம் மூலம் உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள், செல்லப்பிராணிகளையும் அழைத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்தியர்கள் போலந்து, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 ரக விமானத்தில் பத்திரமாக திரும்ப அழைத்து வரப்படுகின்றனர். இன்று காலை 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் விமானம் மூலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து 36 தமிழக மாணவர்கள் பேருந்து மூலம் டெல்லி பழைய தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அதில் தர்மபுரியைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் பூனை ஒன்றுடன் வந்திறங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உக்ரைன் நாட்டில் தற்பொழுது போர் உக்கிரமாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு இருந்து இந்தியா திரும்ப கடுமையான சவால்களுடன் அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இக்கட்டான நேரத்திலும் இந்த மருத்துவ மாணவர் தனது செல்லப்பிராணியான பூனை ஒன்றை கொண்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “நான் உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவில் மருத்துவம் படித்து வருகிறேன். தற்போது அங்கு போர் நடைபெற்று வரும் நிலையில் முதலில் எங்களுக்கு போர் பிரச்சனை குறித்து முழுமையான தகவல் தெரியவில்லை. போலாந்து எல்லையை கடந்து தற்போது டெல்லி வந்தேன். உக்ரைன் நாட்டில் அனைவரும் தங்களுடைய இல்லத்தில் செல்லப்பிராணியை வளர்த்து வருவது வழக்கம். நான் இங்கு வந்துவிட்டால் அங்கு யாரும் பூனையை பார்க்க மாட்டார்கள் என்பதால் பூனையையும் முறையான அனுமதி பெற்று கொண்டு வந்துள்ளேன். நான் தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவன். தூதரக உதவியுடன் தற்போது தாயகம் திரும்பி உள்ளேன். மேலும் என்னுடைய பூனை ஸ்காட்டிஷ் வகை பூனை” என்றார்.
கௌதம் இந்தியாவிற்கு கொண்டு வந்த ஸ்காட்டிஷ் வகை பூனையின் மதிப்பு இந்திய ரூபாயில் பத்தாயிரம் ஆகும். உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள இந்தியர்கள் தற்பொழுது அண்டை நாடுகளின் எல்லைகளைக் கடந்து தான் பிற நாடுகளுக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வருகின்றனர். எல்லையை கடக்கும்போது இந்தியர்களை முறையான அனுமதி இல்லாமல் வருவதாக தெரிவித்து அண்டை நாடுகள் பலவும் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் கௌதமின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விக்னேஷ் முத்து.