மாதிரி புகைப்படம் pt web
இந்தியா

“அப்பா, அப்பா.. என்னால முடியல.. இதுதான் கடைசி வாய்ப்பு.. ” JEE பயத்தில் உயிரை மாய்த்த மாணவி

ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் 18 வயது மாணவி ஜேஇஇ தேர்வினை தன்னால் எழுதமுடியவில்லை என உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Angeshwar G

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் போர்கெடா பகுதியைச் சேர்ந்த 18 வயதான நிஹாரிகா சிங் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்துகொண்டிருந்த சூழலில் வீட்டில் தூக்கில் தொங்கியநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்த நிலையிலும், அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாணவி, தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதிய , உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணக் கடிதத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதில், “அப்பா, அம்மா என்னால் ஜேஇஇ தேர்வினை எழுத முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் தோல்வியுற்றவள், நான் மிக மோசமான மகள். அம்மா, அப்பா மன்னித்துவிடுங்கள். இதுதான் எனக்கு கடைசி வாய்ப்பு” என எழுதியுள்ளார். மேலும், காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் தேர்வு குறித்து பதற்றமாக இருந்த நிலையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், நிஹாரிகா தனது பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் ஜனவரி இறுதியில் நடைபெற இருந்த ஜேஇஇ தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். அவரது தந்தை வங்கியில் காவலாளியாக பணிபுரிகிறார். மூன்று மகள்களில் நிஹாரிகா மூத்தவர். அவரது அறையின் கதவு திறக்கப்படாததால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அறையின் கதவை உடைத்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்

இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் கோட்டாவில் நடந்த இரண்டாவது மரணம் இது என்பது கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளது. உத்திரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது ஜைதி என்பவர் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் அவரும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி மையங்களில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், தேர்வில் தேர்வாக மாணவர்கள் கொள்ளும் அழுத்தத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு இந்த விவகாரங்களில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கு நடந்துகொண்டிருப்பது வேதனைக்குறிய ஒன்று.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.