இந்தியா

நோயாளிக்காக மருத்துவமனைக்கு 3 கி.மீ ஓடிச்சென்ற மருத்துவர்! நெகிழ்ச்சிப் பின்னணி!

நோயாளிக்காக மருத்துவமனைக்கு 3 கி.மீ ஓடிச்சென்ற மருத்துவர்! நெகிழ்ச்சிப் பின்னணி!

ச. முத்துகிருஷ்ணன்

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனைக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி சென்ற நெகிழ்ச்சி சம்பவம் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது.

இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணரான கோவிந்த் நந்தகுமார், நோயாளி ஒருவருக்கு அவசர லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்வதற்காக பெங்களூருவில் உள்ள சர்ஜாபூர் மணிபால் மருத்துவமனைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு சில கிலோ மீட்டர் தொலைவில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார் கோவிந்த்.

வழக்கமாக 10 நிமிடங்களில் மருத்துவமனையை அந்த பகுதியில் இருந்து சென்றுவிடலாம் என்பதால் சிறிது நேரம் காத்திருந்துள்ளார் கோவிந்த். ஆனால் ஒரு இன்ச் கூட நகர முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால் கூகுள் மேப்ஸை எடுத்து எவ்வளவு நேரம் ஆகும் என்பதை பதற்றத்துடன் சரிபார்த்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக 45 நிமிடங்கள் வரை ஆகும் என்று கூகுள் மேப்ஸ் காட்டியுள்ளது.

காரில் காத்திருந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய சரியான நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த கோவிந்த் நோயாளியின் உயிர்தான் முக்கியம் என்பதை உணர்ந்து துணிச்சலாக ஒரு முடிவை எடுத்தார். உடனடியாக காரை அப்படியே நிறுத்திவிட்டு, இறங்கி மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு சர்ஜாபூர்-மாரத்தஹள்ளி பாதையில் ஓடிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். “தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் எனக்கு ஓடுவது எளிதாக இருந்தது. நான் மருத்துவமனைக்கு மூன்று கிமீ ஓடி, அறுவை சிகிச்சைக்கு சரியான நேரத்தில் வந்தேன்” என்று கோவிந்த் நந்தகுமார் கூறினார்.