ஹரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்திலுள்ள பிஜ்னா கிராமத்திலுள்ள 30 வயது இளைஞருக்குத்தான் இந்த சோகம் நேர்ந்திருக்கிறது. அந்த இளைஞர் தனது வயலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது தெருவில் சுற்றித்திரிந்த பிட் புல் நாய் ஒன்று அவரை வழிமறித்து தாக்கியிருக்கிறது.
நாயுடைய கொடூர பற்களின் பிடியிலிருந்து தப்பிக்க நினைத்த அந்த நபர், குச்சியால் அதனை அடித்து தாக்கியிருக்கிறார். உடனே பிட் புல், அந்த நபரின் அந்தரங்க உறுப்பை கடித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் சகோதரர் தெரிவித்திருக்கிறார்.
இளைஞர் கதறும் சத்தம்கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஒரு வழியாக நாயின் பிடியிலிருந்து அவரை மீட்டு கராவுண்டாவிலிருக்கும் மருத்துவமனையில் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அங்கு போதிய மருந்துகள் மற்றும் சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தால் மேல் சிகிச்சைக்காக கர்னல் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த பிரச்னை குறித்து வழக்குப் பதியப்படவில்லை. மேலும், தெருவில் சுற்றித்திரிந்த பிட்புல் நாய் யாருடையது என்பது குறித்தும் விவரங்கள் கிடைக்கவில்லை. கடந்த சில வருடங்களில் நமது நாட்டில் நாய்களின் தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.