இந்தியா

கேரளா: பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணை தெருநாய் கடித்த கொடூரம்!

கேரளா: பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற பெண்ணை தெருநாய் கடித்த கொடூரம்!

Sinekadhara

பூனைக்கடிக்கு தடுப்பூசி செலுத்த சென்ற இளம்பெண்ணை மருத்துவமனைக்குள் தெருநாய் கடித்த கொடூர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை பூனை கடித்ததால் மூன்றாவது டோஸ் ஆண்டி - ரேபிஸ் தடுப்பூசி செலுத்த தனது தந்தையுடன் அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். காலை எட்டு மணியளவில் சென்ற அவர், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நாற்காலியின்கீழ் படுத்திருந்த தெருநாள் ஒன்று அவரை கடித்து காயப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணும், தந்தையும் அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அங்கு வந்துள்ளனர். அங்கிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ள பொதுநல மருத்துவமனைக்கு அந்த பெண்ணை சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபர்னாவின் தந்தை கூறுகையில், நாய் கடித்தவுடன் காயத்திற்கு முதலுதவிகூட அங்கிருந்த ஊழியர்கள் யாரும் செய்யவில்லை. ஆனால் அங்கிருந்த மற்றொரு நோயாளி காயத்தை சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்ய உதவி செய்தார் என்று பத்திரிகையாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார்.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துவருகின்றன. இதனால் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், தெருநாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.