இந்தியா

அன்று பாம்புக்கூட இல்லை...இன்று புலியெல்லாம் உள்ளது-பெரும் காட்டையே உருவாக்கிய தனி ஒருவன்

அன்று பாம்புக்கூட இல்லை...இன்று புலியெல்லாம் உள்ளது-பெரும் காட்டையே உருவாக்கிய தனி ஒருவன்

webteam

அசாம் மாநிலத்தின் காடு மனிதர் குறித்த பாடத்தை அமெரிக்க பள்ளி தங்களது குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கத் தொடங்கியுள்ளது.

மாடித்தோட்டத்தை தனி ஆளாக பராமரிப்பதே பெரும் வேலையாக இருக்கிறது. ஆனால் ஒரு தனி மனிதர் ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? காடு என்றால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் அல்ல, கிட்டத்தட்ட 550 ஹெக்டேருக்கு மேல் காடுகளை உருவாக்கியுள்ளார். தன்னுடைய 16 வயதில் அசாமில் பெரிய புயல் தாக்கியுள்ளது. அப்போது நூற்றுக்கணக்கான பாம்புகள் கோகிலாமுக் என்ற மணல் திட்டிற்கு வந்துள்ளன. பின்னர் கடல் நீர் வடிந்த நிலையில் மரங்கள் ஏதுமில்லாத வெற்று மணல்திட்டில் கடுமையான வெப்பம் நிலவியுள்ளது. சூரியனின் சூடு தாங்காமல் பாம்புகள் சுருண்டு மடிந்துள்ளன.

மணல் திட்டு முழுவதும் பாம்புகள் சுருண்டு இறந்து கிடந்ததை 16வயது பாலகனாக பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜாதவ் பயேங்.அந்த நிலத்தில் ஒரு மரம் கூட இல்லை என்பதே பாம்புகள் இறப்புக்கு காரணம் என்பதை அறிந்த அவர் அந்த இடத்தில் மரங்களை வளர்க்க நினைத்தார். இது குறித்து வனத்துறையை அணுகியுள்ளார். அது ஒரு மணல் திட்டு அதில் மரங்கள் வளர வாய்ப்பில்லை என சொல்லிய அதிகாரிகள், ஆனால் மூங்கில் வளரும் எனக் கூறியுள்ளனர். சமூக காடு வளர்ப்பு திட்டத்தில் கைகோர்த்தார்.

ஆனால் பலரும் கைகளை உதறிவிட்டனர். ஆனாலும் தனி ஆளாக மூங்கிலை வளர்த்தார். மணல் திட்டு மூங்கில் புதரானது. மூங்கிலுக்கு நடுவே வேறு மரங்களும் முளைத்தன. நம்பிக்கை ஊற்று வந்தது அவருக்கு. மற்ற மரங்களையும் வளர்க்கத்தொடங்கினார். சுமார் 40 வருடங்களில் 500ஹெக்டேருக்கு மேல் காடுகளை உருவாக்கி உள்ளார் ஜாதவ். பாம்புகள் வாழக்கூட வழி இல்லாத அந்த இடத்தில் இன்று யானை, மான், புலி, முயல், காண்டாமிருகம் என வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்த காட்டு மனிதரின் கதையை தங்கள் நாட்டு குழந்தைகளுக்கு பாடமாக சொல்கிறது அமெரிக்கா. இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பள்ளி ஆசிரியர், ஜாதவின் கதை எதிர்கால சந்ததியினருக்கு பெரிய பாடம். ஒரு தனிமனிதன் இந்த உலகத்திற்கு இத்தனை பெரிய உதவியை செய்ய முடியும் என ஜாதவ் நிரூபித்துள்ளார். பல உயிரினங்கள் வாழ உதவி செய்துள்ளார்.

அவரின் கதை சுற்றுச்சூழல் மீது மாணவர்களுக்கு ஆர்வம் பிறக்க வழியாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்தெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது. ஆனால் மாணவர்கள் தன்னைப்பற்றி படிப்பது மகிழ்ச்சிதான் என ஜாதவ் தெரிவித்துள்ளார். இந்தக் காட்டு மனிதருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.