இந்தியா

பப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்!

பப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்!

webteam

பப்ஜி விளையாடக்கூடாது என தாய் திட்டியதால் 17 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது

அவ்வப்போது ஏதாவது ஒரு மொபைல் கேம் வந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போடும். சமீபத்தில் அப்படி எல்லோரையும் கட்டிப் போட்டிருக்கிறது பப்ஜி என்ற மொபைல் விளையாட்டு. பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

இந்த விளையாட்டு மூலம் நிறைய குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், விளையாடுபவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஈரான், நேபாளம் போன்ற நாடுகள் பப்ஜி விளையாட்டை தடை செய்துள்ளன. இந்தியாவிலும் பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டுமென பலரும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்

இந்நிலையில் பப்ஜி விளையாடக்கூடாது என தாய் திட்டியதால் 17 வயது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து ஹரியானாவில் நடந்துள்ளது. ஹரியானாவின் ஜிண்ட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்து தனது செல்போனில் பப்ஜி விளையாடியுள்ளான். படிப்பில் கவனம் செலுத்தாமல் பப்ஜி விளையாடுவதாக  சிறுவனின் தாயார் அவனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை காவல்துறை அதிகாரி ஆவார். இது குறித்து பேசிய அவர், நான் பணிக்குச்சென்றிருந்த நேரம் பப்ஜி விளையாட வேண்டாம் என மனைவி திட்டியுள்ளார். அவனது செல்போனையும் பிடுங்கிவைத்துள்ளார். அடுத்த நாள் காலை பார்த்த போது மகன் தற்கொலை செய்திருந்தான் என தெரிவித்துள்ளார்.