டெல்லியில் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பில் காட்சிப்படுத்தப்பட உள்ள அய்யனார் சிலையில் பூணூல் அணிவித்து இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு சிலையை வடிவமைத்த டில்லிபாபு விளக்கமளித்துள்ளார்.
குடியரசு தின நிகழ்ச்சியில் ராஜ பாதையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன. இதற்கான ஒத்திகை இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சார்பிலான அணிவகுப்பில் தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையை சென்னை மாங்காடு அருகே கோவூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லி பாபு என்பவர் வடிவமைத்துள்ளார். இந்நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ள அய்யனார் சிலையில் பூணூல் அணிவித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிலை வடிவமைப்பாளர் டில்லி பாபு, இரண்டு கை வேலுடன் கூடிய அய்யனார் என்றால் பூணூல் இருக்காது என்றும், இந்த அய்யனார் சிவனுடைய அம்சம் என்பதால் பூணூல் அணிவித்திருப்பதாக கூறியுள்ளார்.