வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், ஆறு நாட்களாக உள்ள பணி நாளை 5 நாட்களாக குறைக்க வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் பணிக்குச் செல்லாமல் தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 700க்கும் அதிகமான வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், வங்கி இணைப்பு நடவடிக்கையால் பல லட்சம் அதிகாரிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் எனவும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
கோவை ரயில் நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கனரா வங்கி முன்பு அனைத்து வங்கி அலுவலர்கள் சங்கம் சார்பில், 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள 44 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் வங்கிகள் மூடப்பட்டதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டன.