நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் சூடு பிடித்துள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கிடையே நாடு முழுவதும் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், இங்குள்ள கட்சிகள் எல்லாம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் I-N-D-I-A கூட்டணியும் இந்த தேர்தலைச் சந்திக்க உள்ளன. இதில் சில மாநிலக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட உள்ளன. குறிப்பாக, I-N-D-I-A கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காமல் தனியாகத் தேர்தலைச் சந்திக்கிறது. அதுபோல், ஆம் ஆத்மியும் பஞ்சாப்பில் காங்கிரஸைத் தவிர்த்துவிட்டுத் தனையாகக் களம் காண்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாஜக சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்களில் சிலர் தேர்தலில் போட்டியிடவில்லை என ஒதுங்கிவரும் நிலையில், தற்போது அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகளும் சமீபகாலமாக விலகிவருவது அக்கட்சிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, ஆளும் பிஜு ஜனதா தளம் (BJD) மற்றும் பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க மார்ச் முதல் வாரம் பேச்சுவார்த்தையைத் தொடங்கின. இதில் இருதரப்பிலும் சுமுக முடிவுகள் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக தடாலடியாக அறிவித்தது.
இதனால் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. பிஜு ஜனதா தளமும் விரைவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கு தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக்கணிப்புகளில் 15 மக்களவை மற்றும் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பாஜக - பிஜு ஜனதா தளம் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒடிசாவில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சிக்கிம் மாநில ஆளுங்கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) உடனான கூட்டணியை பாஜக முறித்துள்ளது. ஒடிசாவைப் போன்று சிக்கிமிலும் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு 32 சட்டப்பேரவை தொகுதிகளும், 1 மக்களவை தொகுதியும் உள்ளன. ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன், பாஜக கூட்டணி வைத்து ஆட்சி நடத்துகிறது. தற்போது அங்கு முதல்வராக பிரேம்சிங் தமாங் உள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகள் இடையே மோதல் நடந்து வந்த நிலையில், தற்போது சிக்கிம் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடுவதாக பாஜக அறிவித்துள்ளது. இம்மாநிலத்தில் நடத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சட்டப்பேரவைத் தேர்தலில் 24 முதல் 28 இடங்களை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்விரு கட்சிகளைத் தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் பாஜக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் (SAD) கட்சி விலகியுள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்த அளவில், 13 லோக்சபா தொகுதிகளுக்கும் 7ஆம் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி இருக்கிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிரோமணி அகாலி தளம், இந்த முறை அதிலிருந்து விலகியுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளது. ஆனால், சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே பாஜக தனித்து போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடும் நிலையில் தற்போது பாஜகவும் சிரோமணி அகாலி தளமும் பிரிந்து இருப்பதால், அம்மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது.