அமெரிக்காவிடம் இருந்து அதிநவீனமான எம்கியூ - 9B ரக ட்ரோன்களை இந்தியா வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நவீன கால யுத்தங்களில் ட்ரோன்களின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகெங்கும் ராணுவங்களில் பல வகை ட்ரோன்கள் பயன்பாட்டில் இருந்தாலும் அவற்றில் மிகச்சிறந்ததாக கருதப்படுவது எம்க்யூ - 9 B ட்ரோன்கள். அமெரிக்க தயாரிப்பு ட்ரோன்களான இவை தாக்குதலுக்கு பயன்படுவதுடன் கண்காணிப்பு பணிகளிலும் கி்ல்லாடியாக பார்க்கப்படுகிறது.
எதிரி இலக்கு எங்கு மறைந்திருந்தாலும் குறிதவறாமல் அழிக்கும் வல்லமை கொண்டவை எம்க்யூ - 9 B ட்ரோன்கள். தொலைவில் இருந்தே துல்லியமான படங்களை எடுக்கும் கேமராக்களை கொண்ட இந்த ட்ரோன்கள் சத்தமே இன்றி தாழ்வாக பறந்து குண்டுவீசி அழிக்கும் திறனும் பெற்றவை. ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி, அல் கய்தா தலைவர் அய்மன் அல் ஜவாகிரியை கொல்ல எம்க்யூ - 9பி வகை ட்ரோனைத்தான் அமெரிக்கா பயன்படுத்தியதாகவும் தகவல்கள் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த எம்க்யூ - 9 B ட்ரோன்களை வாங்க இந்தியா திட்டமிட்டிருந்த நிலையில் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்த எம்க்யூ - 9 B ட்ரோன்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 30 ட்ரோன்கள் வாங்கப்பட உள்ள நிலையில் அதில் தலா 10 ட்ரோன்கள் நாட்டின் முப்படைகளும் சரிசமமாக பிரித்து ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வகை ட்ரோன்களை இந்திய கடற்படை ஏற்கனவே குத்தகைக்கு வாங்கி கடற் பரப்பை கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்க: காலை எழுந்ததும் சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை முடக்குகிறது மத்திய அரசு- அரவிந்த் கெஜ்ரிவால்