ஆளுநர் மாளிகையை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணிக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே ஏற்கெனவே மோதல்போக்கு நிலவி வரும் நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்து பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அரசமைப்புச் சட்ட கொள்கைகளின் அடிப்படையில் மாநில அரசு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளதாக செய்தியாளர்களிடம் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்தார். ஆளுநர் மாளிகைக்கான அதிகாரியை மாநில அரசு தன்னிச்சையாக நியமித்து அவர்கள் மூலமாக ஆளுநர் மாளிகையை கட்டுப்படுத்த முடியாது என்றும், மாநில அரசு அவ்வாறு கட்டுப்படுத்த முயன்றால் அரசமைப்பு ரீதியில் பிரச்னை உருவாகும் என்றும் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் தெரிவித்தார்.
ஆளுநரின் கூடுதல் தனிப்பட்ட உதவியாளராக பாஜக நிர்வாகி நியமிக்கப்பட்டதற்கு எதிராக இடதுசாரிகள் கூட்டணி அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதை எதிர்க்கும் வகையில் அரசின் கொள்கை விளக்க அறிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவிக்க மறுத்தார். இந்த விவகாரத்தில் மாநில அரசு சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதன்மைச் செயலர் கே.ஆர்.ஜோதிலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகே அரசின் அறிக்கைக்கு ஆளுநர் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கொள்கை விளக்க அறிக்கையை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் வாசித்தார்.