சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி ரத்து செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்த பட்ச இருப்பை பராமரிக்க வேண்டும் என கடந்த ஆண்டு வங்கி அறிவித்தது. அதன்படி, மாநகரங்களில் வசிப்போரு ரூ.3 ஆயிரம், சிறு நகரங்களில் இருப்பவர்கள் ரூ.2 ஆயிரம், கிராமங்களில் வசிப்போர் ரூ. ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.25 வரை அபராதமும், ஜி.எஸ்.டி. வரியும் விதித்தது.
இந்நிலையில், சேமிப்பு கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகையை பராமரிக்காத 41.2 லட்சம் வங்கிக்கணக்குகளை ஸ்டேட் பேங்க் ரத்து செய்துள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தாக்கல் செய்த மனு மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
16 கோடி ஜந்தன் யோஜனா திட்ட வாடிக்கையாளர்கள் உட்பட 40 கோடி பேர் ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளார்கள். இதில், ஜன்தன் திட்டத்தின் வங்கிக் கணக்கு தொடங்கியவர்களைத் தவிர மற்ற சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களில் 41.2 லட்சம் வங்கி கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்து கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான காலத்தில் ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு காரணமாக குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காதவர்களுக்கான அபராத தொகையை ஸ்டேட் வங்கி கடந்த மார்ச் 13 ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி மாத அபராதமாக அதிகபட்சம் ரூ.50 விதிக்கப்பட்ட நிலையில், அது ரூ. 15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறுநகரங்களில் ரூ. 40 அபராதமாக வசூலிக்கப்பட்டநிலையில் அது ரூ.12 ஆகவும், கிராமங்களுக்கு ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டி வரி சேர்த்து வசூலிக்கப்படும்.