மக்கள்தொகை வளர்ச்சி முகநூல்
இந்தியா

“இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கிவிட்டது” - ஆய்வறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி குறையத் தொடங்கியுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

PT WEB

செய்தியாளர்: கௌசல்யா

ஆண்டு அடிப்படையில் இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி 1971ஆம் ஆண்டில் இருந்த 2.2 சதவிகிதத்தில் இருந்து 2024 ஆம் ஆண்டில் ஒரு சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை 138 கோடியிலிருந்து 142 கோடியாக இருக்கும் எனவும் கணித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

இருப்பினும், 24 வயது முதல் 29 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் இன்னமும் உலகில் அதிக இளைஞர்கள் உள்ள நாடாக இந்தியா திகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் குழந்தை பிறப்பு அதிகமாக இருக்கிறது என்றும் தென்னிந்திய பகுதிகளில் முன்பைவிட குழந்தை பிறப்பு குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 முதல் 59 வயதுக்குள்ளானவர்களில் வேலைபார்ப்பவர்கள் எண்ணிக்கை 1971ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஏறுமுகத்திலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. முதியவர்கள் எண்ணிக்கை 1951ஆம் ஆண்டிலிருந்து சீராக அதிகரித்து வருவதாகவும், 2024ஆம் ஆண்டில் இது 10.7 சதவிகிதமாகவும், 2031ஆம் ஆண்டில் 13.1 சதவிகிதமாகவும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

34 வயதுக்குள்ளானவர்களில் ஆண்களைவிட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் 2011ஆம் ஆண்டில் இது எதிர்மாறாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

முதியவர்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் 16.5 சதவிகிதத்துடன் கேரளா முதலிடத்திலும், 13.6 சதவிகிதத்துடன் தமிழ்நாடு 2 ஆவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில் ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஆந்திராவும் இருக்கின்றன.முதியவர்கள் குறைவாக உள்ள மாநிலங்களில் பீஹார் 7.7 சதவிகிதத்துடன் முதல் இடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் உத்தரப் பிரதேசம், அசாம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.