கொரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட தனது உணவு விடுதியில் வேலை செய்த ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக முதலாளி ஒருவர் காரில் பிரியாணி விற்பனை செய்து வருகிறார்.
உலகையே ஆட்டிபடைக்கும் கொடிய கொரோனா தொற்று நோய் பெரிய தொழில் அதிபர்கள் முதல் கடைநிலை டீக்கடை வைத்திருப்பவர் வரை அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது. அந்த வகையில் சுற்றுலா நகரமான புதுச்சேரியில் கடற்கரை அருகில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நட்சத்திர அந்தஸ்த்துக்கு இணையாக உணவு விடுதி நடத்தி வருபவர் ஆண்டனி. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் பெரும்பாலும் இந்த உணவு விடுதியில் தான் சாப்பிடுவார்கள். சர்வதேச தரத்துடன் இந்தியா, சீனா மற்றும் மேற்கத்திய உணவு வகைகள் இங்கு கிடைப்பதால் இதற்கு தனி மவுசுதான். விலை அதிகமாக இருப்பதால் உள்ளுர் மக்கள் இங்கு செல்வது மிகக் குறைவுதான்.
கொரோனா முடக்கத்தால் வெளிநாடு மற்றும் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் வருகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாலும் உள்ளூர் மக்களும் வராததாலும் இந்த உணவு விடுதி மூடப்பட்டது. இதனால் அதில் பணியாற்றிய 28 தொழிலாளர்களின் நிலை கேள்விக்குறியாகியது.
இந்த நிலையில், வேலையிழந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆண்டனி தமது கடையில் சர்வதேச தரத்துடன் தயாரிக்கப்படும் பிரியாணியை குறைந்த விலையில் உள்ளூர் மக்களுக்கு காரில் சென்று விற்பனை செய்ய முடிவு செய்தார். கார் பிரியாணி விற்பனையை தன்னிடம் இருக்கும் 4 கார்கள் மூலம் புதுச்சேரியில் முக்கிய தெருக்களின் சந்திப்பில் தொடக்கினார். பெரிய விடுதியின் முதலாளி ஆண்டனி வீதிக்கு வந்து நேரடி விற்பனையில் ஈடுபட்டார். அவருடன் தொழிலாளர்களும் ஆர்வமுடன் பணியாற்றினார்கள். இவர்களது கடையில் ரூ.220 பிளஸ் ஜி.எஸ்.டி என விற்ற பிரியாணி வெறும் ரூ.70க்கு விற்கப்பட்டது.
பிரபல கடையின் பிரியாணி காரில் விற்பனை ஆனது பிரபலமானது. இதுகுறித்து ஆண்டனி கூறும்போது, வெள்ளைக்காரர்களுக்காக 20 ஆண்டுகளாக உணவு கொடுத்தோம். இக்கட்டான இந்த நிலையில் உள்ளுர் மக்கள் கொடுத்த ஆதரவு மகிழ்வை தந்துள்ளது. குறைந்த வருமானம் கிடைத்தாலும் மனது நிறைவாக இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.