இந்தியா

மோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்

மோடி ‘பயோபிக்’ படம் வெளியாக எதிர்ப்பு - முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம்

rajakannan

பிரதமர் நரேந்திர மோடி வரலாறு தொடர்பான படம் தேர்தல் நேரத்தில் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

ஓமங்க் குமார் இயக்கத்தில் விவேக் ஓப்ராய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிஎம் நரேந்திர மோடி’. இப்படத்தில் விவேக் ஓப்ராய் பிரதமர் மோடியின் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தை சந்தீப் சிங், ஆனந்த் பண்டிட் மற்றும் சுரேஷ் ஓப்ராய் தயாரிக்கின்றனர். இப்படம் மோடியின் கடந்த கால வாழ்க்கையில் தொடங்கி அவர் குஜராத் முதல்வராகவும், பின்னர் 2014 தேர்தலில் இந்திய பிரதமராகும் வரையுள்ள நிகழ்வுகளை கொண்டுள்ளது. 

இப் படம் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 11ஆம் தேதிக்கு அடுத்த நாளாகும். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க முற்படும் நிலையில் இப்படத்தின் வெளியீடு அதிக எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பயோபிக் படம் வெளியாகவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். 47 அதிகாரிகள் சேர்ந்து எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் ராகுல் காந்தி தொடர்பான , ‘மை நேம் இஸ் ராகா’ (My name is RaGa) வெளியாவதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

“பிரதமர் மோடியும், அவரது கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வர இந்தப் படம் உதவும் என்பதை நீங்கள் (தேர்தல் ஆணையர்) ஒத்துக் கொள்வீர்கள். இது தேர்தல் விதிமீறல். படம் ரீலிஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு தேர்தல் தேதிக்கு பின்னர் வெளியானதா என்று ஆராய வேண்டும்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.