இந்தியா

பட்டப்பகலில் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட இளம் பெண் - உயிருக்குப் போராட்டம்

webteam

17 வயது இளம் பெண் அவரது வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஹைதராபாத் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஹைதராபாத்தின் நகரப்பகுதி அது. அந்தப் பகுதியில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது அவர் அருகே வந்த ஒரு பையன் கூர்மையான கத்தியை கொண்டு அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார். 19 வயது நிரம்பிய அந்தப் பையனின் பெயர் பரத் எனத் தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை தரப்பில் இருந்து இந்தப் பையன் பரத் பல மாதங்களுக்கு முன்பே இந்தப் பெண்னை பின்தொடர்ந்து வந்ததாகவும் சில தொந்தரவுகள் தந்துள்ளதாகவும் தகவல் தரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ‘நியூஸ்மினிட்’ வலைதளச் செய்திக்கு பேசிய மத்திய பகுதியின் கூடுதல் டிசிபி கோவிந்த ரெட்டி, “இந்தச் சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து நாங்கள் குற்றவாளியைத் தொடந்து தேடி வருகிறோம். ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துவிட்டோம். அந்தப் பையன் மீது கொலைமுயற்சிக்கான வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரி இந்தச் சம்பவம் தொடர்பாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். “வழக்கமாக கல்லூரிக்கு என் சகோதரியை மாமாதான் அழைத்து கொண்டுபோய் விடுவார். ஆனால் இன்று அவர் அழைத்துபோகவில்லை. அவள் தனியாகதான் போனாள். அதை புரிந்துகொண்ட பரத், அவளை பின்தொடர்ந்துள்ளார். மேலும் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். என் சகோதரி அந்தநேரம் அம்மாவை சத்தம்போட்டு அழைத்துள்ளார். ஆனால் அது என் அம்மாவிற்கு கேட்கவில்லை. ஆகவே அவள் ஆபத்தான கட்டத்திற்குச் சென்றுவிட்டாள். பிறகு என் அம்மாதான் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தார். ரத்தவெள்ளத்தில் என் மகள் போராடிக் கொண்டிருக்கிறாள் என்றதும் அவர்கள் எல்லோரும் வந்துவிட்டனர்” என்று விளக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் மாமா, தாக்கிய மாணவன் பரத்திற்கும் எங்கள் வீட்டுப் பெண்ணிற்கும் எந்தவிதமான உறவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும் அவர், தொடர்ந்து எங்கள் வீட்டுப் பெண்ணிற்கு பரத் துன்புறுத்தல்களை கொடுத்து வந்தார் என்றும் பரத்திடம் அவர் பேச முயற்சித்தபோது இனிமேல் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன் என்று பரத் வாக்குறுதி தந்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தும் இந்தப் பையனின் தொந்தரவினால் எரிச்சலடைந்த குடும்பத்தினர் ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இந்தப் புகார் குறித்து காவல்துறை தரப்பு அலட்சியம் காட்டி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.  

தாக்குதலுக்கு உள்ளான மாணவி இப்போது மாலாக்பேட் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கருமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாணவியின் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில், “பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். அந்தப் பையன் தாக்கியதில் உண்டான காயங்கள் மிகக் கடுமையாக உள்ளன. ஆகவே மாணவியின் உடல்நிலை மோசமாக உள்ளது. மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளனர். துரதிருஷ்டவசமாக அதை தாங்கும் சக்தி அந்தப் பெண்ணின் உடலுக்கு தற்போதுவரை இல்லை” என்று கூறியுள்ளது.

இந்த மருத்துவமனையின் மக்கள் தொடர்பாளர் சம்பத் இப்பெண்ணின் நிலை குறித்து சில விளக்கங்களை அளித்துள்ளார். அவர், “அந்தப் பெண் குறைந்தது 15 அல்லது 17 முறை வரை கழுத்துப் பகுதியில் கடுமையாக கத்தியால் குத்தப்பட்டுள்ளார். மேலும் கைகளிலும் கடுமையான கத்திக் காயங்கள் உள்ளன. நாங்கள் அவரது ரத்த அழுத்தம் சீராவதற்காக காத்துஇருக்கிறோம். அதை சரியான நிலைக்கு கொடுவந்துவிட்டால் அதன்பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்வோம்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் நடந்த அதிர்ச்சிக்கூட அடங்கவில்லை. அதற்குள் யாரோ ஒரு பெண்ணுக்கு தீ வைத்த இன்னொரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் நடந்துள்ளது. 12 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் ஆந்திரப் பிரதேசம் குர்னூல் மாவட்டத்தைச் சார்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் உயிருக்காக போராடி வருகிறார்.