சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை தொலைபேசியில் பேசி, கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த மேற்கு வங்க மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கிரிக்கெட் ஜாம்பவானும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. அவரை தொலைபேசி மூலம் 20 முறை தொடர்பு கொண்ட வாலிபர் ஒருவர் ஆபாசமாக பேசியும், கடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக டெண்டுல்கர் குடும்பத்தினர் மும்பையின் பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர், தொலைப்பேசியில் பேசியவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தேவ்குமார் மைதி என்று கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து மும்பை மற்றும் மேற்கு வங்க மாநில காவல்துறையினர் இணைந்து, கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் தேவ்குமார் மைதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது தேவ்குமார், டெண்டுல்கரின் மகள் சாராவை நான் டிவியில் தான் பார்த்தேன். அப்போதிலிருந்தே சாராவை நான் காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். அவரை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அதற்காகவே நான் டெண்டுல்கர் வீட்டு தொலைபேசி எண்ணிற்க்கு 20 முறைக்கும் மேல் தொடர்பு கொண்டேன். சாராவை நான் நேரில் பார்த்தது கூட கிடையாது என்று கூறினார்.