முத்தையா முரளிதரன் எக்ஸ் தளம்
இந்தியா

கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீடு.. இந்தியாவில் பிசினஸை தொடங்கும் முத்தையா முரளிதரன்!

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற பிரபல சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இந்தியாவிலும் தனது வணிகத்தைத் தொடங்கியுள்ளார்.

Prakash J

இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு முத்தையா முரளிதரன் வணிகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு உலக பணக்காரகளில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருந்த கேம்பா கோலா நிறுவனத்துடன் முத்தையா முரளிதரனும் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இலங்கையில் இவ்வகை குளிர்பானத்தைச் சந்தைப்படுத்தும் நோக்கில், முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முரளிதரனின் நிறுவனம் அலுமினியம் கேன்களில் கேம்பா கோலாவை பேக்கிங் செய்து விநியோகம் செய்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், முத்தையா முரளிதரன் இந்தியாவிலும் தனது வணிகத்தைத் தொடங்கியுள்ளார். கர்நாடக மாநிலம், சாமராஜ நகர் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான உற்பத்தி தொழிற்சாலை தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கும் அதன் வர்த்தகத்திற்கும் சுமார் ரூ.1400 கோடி வரையிலான முதலீடு செய்யும் வகையில் முத்தையா முரளிதரன் களமிறங்கியுள்ளார். மேலும், அவர் தார்வாட் நகரிலும் தொடர்ந்து இயங்க திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிக்க; ஆந்திரா| அன்று வீடு..இன்று அலுவலகம்; ஜெகன் கட்டடம் இடிப்பு..பழிக்குப்பழி வாங்கும் சந்திரபாபு நாயுடு!

இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில லார்ஜ் மற்றும் மீடியம் தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் தெரிவித்துள்ளார். அவர், “இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கர்நாடகாவில் ரூ.1400 கோடி முதலீட்டில் பானங்கள் மற்றும் இனிப்பு வகை பொருட்களை விநியோகிக்கும் வகையில் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காக முத்தையா முரளிதரன், அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவரும் போதிய ஒத்துழைப்பும், சலுகையும் வழங்கப்படும் என உறுதியளித்திருந்தார். அந்த வகையில்தான், முரளிதரனின் வணிகம் இந்தியாவில் சூடுபிடிக்க இருக்கிறது. முத்தையா முரளிதரன் தொழிற்சாலைக்காக 46 ஏக்கர் நிலம் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2025 முதல் உற்பத்தி பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: FactCheck|முகமது ஷமி - சானியா மிர்சா திருமணம்? வைரலாகும் புகைப்படங்கள்.. உண்மை என்ன?