இந்தியா

“அரசின் இழப்பீடு போதுமானதாக இல்லை” - டெல்லியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேரில் ஆய்வு

“அரசின் இழப்பீடு போதுமானதாக இல்லை” - டெல்லியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நேரில் ஆய்வு

webteam

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வடகிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தார்.

குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, டெல்லியின் வடகிழக்கு பகுதி போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 45 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான பிரம்மபுரிக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்றார். அப்போது அங்கு வன்முறைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை பார்வையிட்டார். இது குறித்து கூறும்போது இவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவதைப் பார்ப்பது மிகவும் கவலையளிப்பதாகக் கூறினார்.

“நான் இங்கு வசிக்கும் மக்களோடு உரையாடினேன். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டேன். இந்தக் கடினமான காலங்களில் வகுப்புவாத நல்லிணக்கம் பற்றிய பல நிகழ்வுகளை மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்” என்றார். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நபர்கள் வழங்கிய உதவிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பலர் துணை நின்றனர் என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “நீங்கள் மனிதநேயத்திற்காக நிற்க வேண்டும். இது மனிதநேயம். மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தின் செய்தியை அனுப்ப நான் இங்கு வந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்த வேண்டிய நேரம் இது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும்.அதை நீங்களும் நானும் சேர்ந்துதான் செய்ய வேண்டும்” என்ற அவர் டெல்லி அரசாங்கத்தின் பணிகளைக் குறிப்பிடும் போது, அரசாங்கம் தனது பணிகளைச் செய்து வருகிறது, ஆனால் இழப்பீடு போதுமானதாக இல்லை என்றார். நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். நல்லிணக்கத்தை பரப்புவதே காலத்தின் தேவை. மக்கள் ஒன்று சேர வேண்டும்”என்றும் கோரிக்கை விடுத்தார்.