இந்தியா

இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவர் தென் இந்தியாவில் தங்கியிருந்தாரா?

இலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவர் தென் இந்தியாவில் தங்கியிருந்தாரா?

Rasus

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஜஹ்ரான் ஹாஷிம் தென் இந்தியாவில் சில காலம் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஐநூறுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று பெண்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் கொடூர குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் மூளையாக செயல்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்ட 9 பேர் தென் இந்தியாவில் சில காலம் தங்கி இருந்ததாக இலங்கை ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்தியாவில் வைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் வைத்து  தீவிரவாத பயிற்சி வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழும்புவதாக இலங்கையை சேர்ந்த விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஜஹ்ரான் ஹாஷிம் இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா என்பது குறித்து இந்திய அதிகாரிகள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்களுடன் ஜஹ்ரான் ஹாஷிம் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ஹாஷிம் ஃபேஸ்புக் பக்கத்தை தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வரும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கும் அதிகாரிகள் அந்த இளைஞர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் மற்றும் மத தலைவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கோவையில் ஐஎஸ் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஜஹ்ரான் ஹாஷிம் ஆதரவாளர்களாக இருந்ததாக தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.