இந்தியா

நடுவானில் சமோசா, காபியுடன் ஹோலி கொண்டாடிய விமானிகள்.. அதிரடியில் இறங்கிய ஸ்பைஸ்ஜெட்!

நடுவானில் சமோசா, காபியுடன் ஹோலி கொண்டாடிய விமானிகள்.. அதிரடியில் இறங்கிய ஸ்பைஸ்ஜெட்!

JananiGovindhan

விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது இரு விமானிகள் காஃபி குடித்துக் கொண்டும் குஜ்யாஸ் என்ற சமோசா சாப்பிட்டுக்கொண்டும் இருந்ததற்காக விமான போக்குவரத்துத்துறை அவர்கள்மேல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போது இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே துரத்தி துரத்தி கலர் பொடியை வீசுவதும், பெண்கள் மீது அத்துமீறி கலர் பொடியை தூவியதும் என சில சம்பவங்கள் நடந்து, மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோக்களுமே சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனங்களை பெற்றிருந்தன.

இந்த நிலையில், டெல்லியில் இருந்து கவுகாத்தி சென்ற ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில் காக்பிட் எனும் விமான ஓட்டிகளின் அறையில் விமானிகள் சமோசா சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர். உடன், குடிப்பதற்காக காபியும் வைத்திருக்கிறார்கள். இதற்காகத்தான் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

என்னங்க சொல்றீங்க... காபியும் சமோசாவும் சாப்பிட்டதில் என்ன தப்பு, ஏன் நடவடிக்கை என்கின்றீர்களா? காரணம் உள்ளது. அந்த காபி ஒருவேளை கீழே சிறிதளவு சிதறினாலும், ஷார்ட் சர்க்யூடாகி மிகப்பெரிய விபத்தையே ஏற்படுத்தி அவசர தரையிறக்கத்துக்கு வழிவகுத்திருக்குமாம். ஆனால் நல்வாய்ப்பாக அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை. இருப்பினும் இது குறித்த வீடியோக்கள் பரவிய நிலையில், விமானத்தை இயக்கிய விமானிகள் மீது விமான போக்குவரத்துத்துறை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

அதன்படி, தொடர்புடைய விமானிகள் யார் என்றும் உரிய விளக்கம் பெற்று நடவடிக்கை எடுக்கும்படியும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருக்கிறது.

இதனையடுத்து கடந்த புதனன்று நடுவானில் விமானத்தை இயக்கிய போது ஹோலி கொண்டாடிய தனது இரண்டு விமானிகளை பணி நீக்கம் செய்திருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். ‘என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே, எங்கு சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம்போல’ என பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.