பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியாவிற்கு சுமார் 2 கோடி ரூபாய் செலவானதாகக் கூறப்படுகிறது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது. இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானில் சீறிப்பாய்ந்து வென்ற மிராஜ் ரக விமானம் ஒவ்வொன்றிலும், லேசர் மூலம் குறிவைத்து தாக்கும் வகையில் 225 கிலோ எடைகொண்ட குண்டுகள் நிரப்பப்பட்டிருந்தன. ஆனால் 3 பயங்கரவாத முகாம்களில் 4 அல்லது 5 குண்டுகள் மட்டுமே வீசப்பட்டன.
அந்த வெடிகுண்டுகளின் மதிப்பு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. இதர செலவுகளையும் சேர்த்து பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் பாடம் புகட்ட இந்தியாவிற்கு சுமார் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானதாகக் கூறப்படுகிறது.